A+ A-

ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸாகுமா?

திரைத்துறையில் நடைபெற்ற வேலைநிறுத்தம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியீட்டுக்கு காத்திருக்கும் படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன.

ஏற்கனவே, அறிவித்தபடி ரஜினியின் 'காலா' ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸாக வேண்டும். ஆனால் தணிக்கை செய்த தேதிகளின் அடிப்படையில்தான் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் காலா குறித்து ஏதாவது மாற்றம் உண்டா என்று விஷாலிடம் கேட்டபோது, “தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து பேசி, அனைத்துப் படங்களும் வெளியாகும் தேதியை முடிவு செய்வோம். வேலை நிறுத்தத்தால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த படங்களை வெளியிட முடியவில்லை. எனவே, வரிசைப்படி படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். எந்தப் பாகுபாடும் காட்டாமல், வாரத்திற்கு 3 படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இதன்மூலம் காலா படம் ஏப்ரல் 27 அன்று வெளியாக வாய்ப்பில்லை என்பது புரிகிறது. ஆனாலும் திட்டமிட்ட தேதியில் காலா படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முயற்சியை தயாரிப்பு தரப்பு இன்னும் கைவிடவில்லையாம்.