A+ A-

பாகுபலி 2 ஓராண்டு பூர்த்தி..!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த பிரம்மாண்டமான சரித்திரப் படமான 'பாகுபலி 2' படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இன்றுடன் முதல் ஆண்டை நிறைவு செய்கிறது 'பாகுபலி 2'.

இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் படைத்த இந்தப் படம் ஹிந்தியில் மட்டும் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. தமிழ்நாட்டில் 100 கோடிக்கும் மேல் வசூலித்த்து. ஜப்பான் நாட்டில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து சீனாவில் வரும் மே 4ம் தேதி வெளியாக உள்ளது.

ஒரு சரித்திரப் படத்திற்கு இந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா என இந்தியத் திரையுலகை ஆச்சரியப்பட வைத்த படம். ஒரு டப்பிங் படமாக ஹிந்தியில் வெளியாகி கான் படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து ஹிந்தித் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம்.

சுமார் 300 கோடி செலவில் தயாரான படம் 1700 கோடி வசூலை எட்டியது. சீனாவிலும் வெற்றி பெற்றால் 2000 கோடி வசூல் சாதனையைப் பெற முடியும். மீண்டும் இப்படி ஒரு படம் வெளிவருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய 'பாகுபலி 2' படம் உண்மையில் மகத்தான ஒரு படைப்பாக இந்தியத் திரையுலகம் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம்தான்.