A+ A-

சினிமா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை.!


'மிஸ் சென்னை' பட்டம் வென்றவர். தமிழ் சினிமாவில், பல வெற்றிப் படங்களை தந்தவர், நடிகை கஸ்துாரி. தற்போது சமூக வலைதளங்களில், அரசியல், சினிமா சார்ந்து, பல தடாலடி கருத்துகளை கூறி வருகிறார்.

அவருடன் பேசியதிலிருந்து:உங்கள், 'டுவிட்டர்' பதிவில், அதிக உள்குத்து, நையாண்டி ஏன்?

நையாண்டி, நக்கல் எல்லாம், என்னை வைத்தே, அதிகம் பதிவு செய்துள்ளேன். கருத்து சுதந்திரத்தை ஆணிவேராக மதிக்கும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருந்ததால்,

என் பதிவுகள் நையாண்டியாக இருக்கலாம்.

நம் நாட்டில், மற்றவரை கேலி செய்தால், சேர்ந்து சிரிப்பர். ஆனால், தன்னைத் தானே ஒருவர், கேலி செய்தால் சிரிப்பே வராது; இது மாற வேண்டும். அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்து விடைபெற்று செல்பவர்கள், அவரைப் பற்றி, அவரது ஆட்சிப்பற்றி, தனிப்பட்ட குணத்தை பற்றி, அவரே கிண்டல் செய்ய வேண்டும்.ஆனால், இங்கு கருத்து சுதந்திரத்தையும், காமெடியையும் கவனமாக கையாள வேண்டியதாக உள்ளது. அரசியல் கலாய்ப்பு தமிழகத்திற்கு புதிதாக உள்ளது. என் கலாய்ப்பில், வன்மம் இருக்காது. சில எதிர்ப்பு வரத் தான் செய்யும். தமிழகத்தில் நேர்மறை சிந்தனை இன்னும் வளர வேண்டும்.

உங்கள், 'ரோல்மாடல்' யார்?

ஆங்கில, 'டிவி' சேனல்களில், கேலி, கிண்டலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும், டேவிட் லெட்டர்மேன், ஜேய் லெனோ, ஜிம்மிகிம்மல், கோர்ல்பேர்ட் இவர்களெல்லாம், என் ஆதர்ஷ நாயகர்கள்.

ரஜினி, கமல் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது,

நம்பிக்கையோடு பார்த்தேன். தன் தலைமை பண்பை நிரூபித்தவர், அவர். ஆனால், ரஜினியும், கமலும், நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளனர்; கமல்

களத்தில் இறங்கியுள்ளார். போகப் போகத் தான் தெரியும். இவர்கள் நினைத்தால், 'ஏசி' அறையிலேயே இருக்கலாம். அரசியலில் அவர்களுக்கு ஆதாயம் என்பதை விட, நஷ்டம் தான் இருக்கும். சினிமா இல்லாமல், தமிழக அரசியல் இல்லை.சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனரா?

தமிழக மக்கள், சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்து ஓட்டுப் போடுவதில்லை. அப்படி போட்டிருந்தால், எம்.ஜி.ஆருடன் நடித்த, லதா, சரோஜாதேவி தான், வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆரால், அரசியலில் வளர்க்கப்பட்ட, ஜெயலலிதா தான் வெற்றி பெற்றார்.

சினிமாவில் வெற்றி பெற்றவர், அரசியலில் ஜெயிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, சிவாஜியை கூறலாம். ஆனாலும், சினிமாவை பிரித்து வைத்து, தமிழக அரசியலை பார்க்க முடியாது.

சினிமா ஸ்டிரைக் பிரச்னைக்கு தீர்வு என்ன?

ஒரு ரசிகையாக சொல்கிறேன். பாக்கெட்டுக்கு அடக்கமான, ஒரே பொழுதுபோக்கு, சினிமா தான். 600 - 1,000 ரூபாயில் முடிந்து விடும். ஆனால், அதே வேறு இடங்களுக்கு சென்றால், ஆயிரக்கணக்கில் பழுத்து விடும். ஐந்து தனி நபர்களால் தான் அந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த ஐந்து பேர், தங்கள் தவறை உணர வேண்டும். தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும். தியேட்டர்காரர்களுக்கு நஷ்டமே இல்லை. கார்ப்பரேட் வியாபாரமாகி விட்ட சினிமாவில், மரண அடி வாங்குவது தயாரிப்பாளர்கள் தான்.

இந்த தலைமுறை நடிகையர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்போதுள்ள நடிகையரில் ஓரிருவரை தவிர, அனைவருமே ரொம்ப ஸ்மார்ட்டாக உள்ளனர். எங்கள் தலைமுறையை விட, சிறப்பாக செயல்படுகின்றனர். சினிமாவுக்கு அப்பாற்பட்டு, நாலும் தெரிஞ்ச புத்திசாலிகளாக உள்ளனர்.