A+ A-

ஜீவாவின் கொரில்லா படத்துக்கு தடை வருமா?


ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் படம் கொரில்லா. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு விலங்கை மையமாக வைத்து உருவாகும் படம். டான் சாண்டி இயக்குகிறார். இந்தப் படத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வளர்ப்பு சிம்பன்சி வகை குரங்கு நடிக்கிறது. இதற்காக ஜீவா 15 நாள் தாய்லாந்து சென்று அந்த குரங்குடன் பழகி அதற்கு நண்பனாகி அதன் பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கொரில்லாவும் நல்ல முறையில் நடித்துக் கொடுத்துள்ளது.

தாய்லாந்து படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பீட்டா அமைப்பினர் கொரில்லா படத்தை சிம்பன்சி குரங்கை வைத்து எடுத்தீர்களா? அதனை துன்புறுத்தினீர்களா? சிம்பன்சி குரங்கை வைத்து படம் எடுக்க அரசிடம் அனுமதி பெற்றீர்களா? படப்பிடிப்பின்போது விலங்கு நல வாரிய உறுப்பினர்கள் உடன் இருந்தார்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கு பதலிளித்த படத்தின் இயக்குனர் டான் சாண்டி, "தாய்லாந்து நாட்டு அரசின் அனுமதியுடன் தான் படமாக்கப்பட்டது. சிம்பன்சி குரங்கின் பயிற்சியாளர் மற்றும் மருத்துவர் படப்பிடிப்பின்போது உடன் இருந்தார். சிம்பன்சியை துன்புறுத்துகிற வகையில் எந்த காட்சியும் எடுக்கப்படவில்லை. கிராபிக்சில் காட்சிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை" என்று பீட்டாவுக்கு விளக்கம் அளித்துள்ளர்.

பீட்டா அமைப்பு இந்த விளக்கத்தில் சமாதானம் ஆகுமா. அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலம் படத்துக்கு இடையூறு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.