A+ A-

இருட்டு அறையில் முரட்டு குத்து..!


கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அடுத்த வாரம் மே 4ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர ஹர மகாதேவகி படத்தை அடுத்து கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்தின் தலைப்பிற்கேற்ப அடல்ட் ஹாரர் பின்னணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று பேர் நடிக்கின்றனர்.


படத்தில் காமெடிக்காக கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தின் பெயரே ஒரு மாதிரியாக இருப்பதால், படமும் ஏ கிரேட் படமாக இருக்கோமோ என இயக்குனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த சந்தோஷ், இந்தப் படத்துல மெசேஜ் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். அதை விட பயங்கர காமெடியாகவும் இருக்கும் என சத்தியம் செய்கிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டீசரின் கவர் படமே சற்று கூடுதல் மசாலா கலந்து பலர் முகம் சுழிக்கும்படி இருந்தது. அதை விட டீசர் ஹேண்ட் ஜாப் கேபின் ஹாலிவுட் படத்தின் காப்பி என ஒரு குரூப் கலாய்க்க தொடங்கினர். இதை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தை வரும் மே 4ந் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் நேற்று நடந்த மிஸ்டர் சந்திரமௌலி இசை வெளியீட்டு விழாவில், மிஸ்டர் சந்திரமௌலி படத்தை விட தமிழ்நாடே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. நான் இப்போதே முன்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது என்பதை தான் பொறுத்திருந்து பார்ப்போமே?