A+ A-

அழிந்து வரும் ஒரு சமூகத்தின் கதை..!


ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்து, நடித்திருக்கும் படம் தொரட்டி. இவருக்கு ஜோடியாக சத்யகலா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர அழகு, முத்துராமன், சுந்தர்ராஜ், ஜானகி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜித்தின் ரோஷன் இசை அமைத்துள்ளார், குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகம் மாரிமுத்து இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

இது அழிந்து வரும் ஒரு விவசாய சமூகத்தின் கதை. முன்பு வயல்களில் ஆட்டுக்கிடை போடுவதை பார்த்திருக்கிறோம். நாடோடிகள் போன்று ஆடுகளுடன் வரும் மக்கள் விவசாய நிலங்களில் கிடை போடுவார்கள். அந்த ஆடுகள் அந்த வயலிலேயே மேய்ந்து வாழும். அந்த ஆடுகளின் இயற்கை கழிவுகள் அந்த நிலத்தின் உரமாகும். பின்னர் வேறு இடம் நோக்கி அவர்கள் கடந்து செல்வார்கள். இவர்கள் தனியான ஒரு விவசாய சமூகத்தினர். இப்போது அந்த சமூகத்தினர் மறைந்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை இது. அவர்கள் பயன்படுத்தும் ஆயுதத்தின் பெயர்தான் தொரட்டி.

ஆடுகளுக்கு கிளை பறிக்க பயன்படும் அந்த ஆயுதம்தான் அவர்களுக்கு தெய்வம். அதை சுற்றி பின்னப்பட்ட கதை. 1980களில் நடக்கிற கதை. கூடா நட்பு ஒருவன் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்கிற கதையின் வாயிலாக அந்த மக்களின் வாழ்க்கையை சொல்கிறோம். என்றார்.