A+ A-

இந்திய அளவில் டிரெண்ட் : அஜித் ரசிகர்கள் விசுவாசம்..!


தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை அஜித். எந்த பின்புலமும் இல்லாமல் தன் உழைப்பு, நம்பிக்கை இவற்றை மூலதனமாக கொண்டு புகழின் உச்சியில் இருப்பவர்.

பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அஜித், பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், அதில் சாதிக்க எண்ணினார். ஆனால் அதற்கான மூலதனம் அவரிடம் இல்லை. இதனால் சினிமா பக்கம் திரும்பிய அஜித், ஆரம்பகாலத்தில் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பைக் ரேஸில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

ஒருக்கட்டத்தில் சினிமா என்று முடிவு செய்த அஜித், 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். 1995ல் வெளிவந்த ஆசை அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகான அவரது திரைப் பயணத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாலும் மிகப் பெரிய வெற்றி என்று பார்த்தால் அவை குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். இருந்தாலும் வெற்றி, தோல்வி எதுவுமே பாதிக்காத ஒரு நடிகராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

நடிகர் அஜித்திற்கு இன்று(மே 1) 47-வது பிறந்தநாள். அவருக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்தாலும், இன்றைக்கும் அஜித் ரசிகர்களை போன்று யாரும் அமர்க்களமாக தங்களுக்கு பிடித்தமான நடிகரை கொண்டாட முடியாது.

அப்படி இன்று அஜித்தின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அஜித் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள், உலவ விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அஜித்தின் பிறந்தநாள் இந்திய அளவில் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

அஜித், அடுத்தப்படியாக சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.