A+ A-

மீண்டும் நடிப்புக்கு திரும்பும் நம்ம கேப்டன்…


தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் நாயகனாக இருந்த விஜயகாந்த் மீண்டும் நடிப்புக்கு திரும்ப இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மாஸ் ஹீரோக்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த் தான். கருப்பாக இருந்தாலும் அவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் ஏராளம். 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை தந்தது. இந்தப் படம்தான் இவருக்கு கேப்டன் என்னும் அடைமொழியை உருவாக்கியது. ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் குடும்ப கதைகளிலும் நடித்து அசத்தியவர் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். தொடர்ந்து, அரசியலிலும், பல வெற்றிகளை குவித்தவருக்கு, அவரது உடல்நிலை ஆபத்தாக வந்தது. அவரின் குரலிலும், உடலில் ஏற்பட்டு இருக்கும் தெளிவற்ற நிலை விஜயகாந்தின் கம்பீரத்தை சரித்து இருக்கிறது. இதற்கான சிகிச்சையிலும் அவர் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வரவேண்டும் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை வைத்தார். அவர் என் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் செல்வமணியும் தெரிவித்தாராம். விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் தான் படத்தை தயாரிப்பதாக தாணு தெரிவித்து இருக்கிறார். இதற்கெல்லாம் விடை சொல்லும் விதமாக பேசிய விஜயகாந்த், எல்லாரும் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தை தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறார்கள். விரைவில் அதன் ரீமேக்கில் நடிப்பேன் என கூறினார். ஆனால், கேப்டன் புகழ் இப்படத்திற்கு எப்படி உதவும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.