A+ A-

சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலாபால்

திருட்டுப்பயலே 2 படபிடிப்பின் போது இயக்குநர் சுசி கணேசன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார். 

மீ டூ இயக்கம் மூலம் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்த் திரைத்துறையினரின் உண்மையான முகம் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 2005ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கவிஞர் லீனா மணிமேகலையும் மீ டூ இயக்கம் மூலம் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்நிலையில், சுசி கணேசன் மீதான பாலியல் புகாருக்கு, மணிமேகலைக்கு ஆதராவாக அமலாபாலும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமலாபால் கூறியதாவது: இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது. 

நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன். அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.