A+ A-

27 வருடம் கழித்து ரஜினிக்கு பின்னடைவு.! கெத்து காட்டும் விஸ்வாசம்.!

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் வெளியான நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் திரைப்படம் முதல் நாள் வசூலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் ரஜினியின் பேட்ட படம் சாதனை படைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டயும், அஜீத்குமார் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் கடந்த 10 ந்தேதி ஒரே நாளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின. பொங்கல் பண்டிகைக்கு முன்னராகவே வெளியானாலும் இரு படங்களுக்கும் ரசிகர்கள் அளித்த ஆதரவால் அரங்குகள் அதிர்ந்து வருகின்றது
நடிகர்கள் ரஜினி மற்றும் அஜீத்துக்கு இடையே போட்டி இல்லை என்றாலும், இருவரையும் ஒப்பிடுவது சரியான அளவீடாக இருக்காது என்ற போதிலும் இருவரது ரசிகர்களும் பேட்டயா, விஸ்வாசமா என்று வார்த்தையுத்தம் நடத்தி வந்தனர். முதல் நாள் இரு படங்களுக்கும் சிறப்புகாட்சிகள் நடத்தி தங்கள் பலத்தை காட்டினர்
இந்த நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம், பேட்டையை அடிச்சி துக்கி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. 1992 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தேவர் மகன் படம், ரஜினியின் பாண்டியன் படத்தை வசூலில் முந்தியது. அதன் பின்னர் கடந்த 27 ஆண்டுகளில் ரஜினி படத்துடன் வெளியான ஒரு படம் கூட அவரது படத்தின் வசூலை தமிழகத்தில் மிஞ்சியது இல்லை. அந்த சாதனையை நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் 27 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகம் தவிர்த்து கேரளா, ஆந்திரா , கர்நாடகம் மற்றும் வட இந்தியாவில் அஜீத்தின் படங்களுக்கு விரிவான வியாபாரம் இல்லை என்பதால் அங்குள்ள வசூல் நிலவரங்கள் மற்றும் வெளிநாட்டு வசூல் நிலவரங்களின் அடிப்படையில் சர்வதேச அளவில் முதல் நாள் வசூலில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட புதிய கோட்டை கட்டி இருக்கிறது..! என்கின்றனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.
இரு படங்களும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் பிடித்திருப்பதால் வரும் நாட்களில் இரு படங்களும் வசூலில் புதிய உச்சத்தை தொடும் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்
பிரபல நடிகர்களின் திரைபடங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ஆரோக்கியமானதாக திரையரங்கு உரிமையாளர்கள் கருதினாலும், யார் பெரியவர் ? என்ற சர்ச்சையும் அதனை தொடர்ந்து சில சச்சரவுகளும் எழுவதை தடுக்க சம்பந்தபட்ட நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும்..!