A+ A-

குடிபோதையில் தள்ளாடிய நடிகர்..!

சென்னை சூளைமேட்டில பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்தி குடி போதையில் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

நடிகர் ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. நடிகரான இவர் 11 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்த சிவலிங்கா படத்திற்கு பின்னர் போதிய படவாய்ப்புகள் இல்லாததால் ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் நடிகர், நடிகைகளுடன் தங்கி இருக்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார் அதிலும் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் பட்டபகலில் நண்பருடன் மூக்கு முட்ட குடித்து விட்டு அவரது போர்டு காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார் நடிகர் சக்தி. இளங்கோவடிகள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஆல்டோ காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அவரது காரை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டி பிடித்தனர். காரில் இருப்பது நடிகர் சக்தி என்று முதலில் அதிசயப்பட்டவர்கள், அவர் அளவில்லா குடி போதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்த விழ...நிற்ககூட மதியில்லாத நிலையில்... தள்ளாடி விழுந்த  நடிகர் சக்தியை இளைஞர் ஒருவர் தாங்கிப்பிடித்தார்

இந்த தள்ளாட்டத்திலும் முகத்தில் கூலிங்கிளாஸ் அணிய மறக்காமல் காரில் சாய்ந்தபடி நின்றார் சக்தி

பின்னர் வந்த காவல்துறையினர் சக்தியையும் அவரது நண்பரையும் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆட்டோவில் அவர்கள் இருவர் ஏறுவதற்கே இடம் இல்லை..!

இதையடுத்து அவர் வந்த காரிலேயே ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் போக்குவரத்து புலானாய்வு காவல்துறையினர். குடிபோதையில் தள்ளாடி, வேட்டியை தவறவிட்டதை ஊரே செல்போனில் படம் பிடித்ததை அறியாத நடிகர் சக்தி, தன்னை யாரும் படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக ஊடகத்தினர் இங்கிருந்து சென்றால் தான் காரில் இருந்து இறங்குவேன் என்று அடம்பிடித்தார்..!
அவரிடம் ஊடகத்தினர் எல்லோரும் சென்று விட்டதாக கூறி நம்பவைத்து காரில் இருந்து இறக்கி காவல் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர் காவல்துறையினர். அவரை பிரீத்தலைசர் கருவியால் சோதித்த போது 
அவர் மிதமிஞ்சிய போதையில் இருந்தது தெரியவந்தது.

போதையில் கார் ஓட்டியது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டி விபத்தை உண்டாக்கியது ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சக்தியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இதற்கு முன்பு நடிகர்கள் ஜெய், மனோஜ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் கார் ஓட்டி காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர். அந்தவரிசையில் நடிகர் சக்தியும் போதையில் மதிகெட்டு வாகனத்தை இயக்கி விபத்தை உண்டாக்கி, காவல்துறையினரிடம் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.