A+ A-

அரசியல் களத்தில் குதிக்கிறாரா விஜய்??

கமலின் 60ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்பிறகு தம்பிகளுக்கும் அவர்கள் வழிவிட வேண்டும் என்றும் விஜய்யை மனதில் வைத்து பேசினார். 

இந்நிலையில், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய பிறகு அவரது நடவடிக்கை மற்றும் பேச்சில் நிறைய மாற்றங்கள். அதாவது ரஜினிக்கு எதிராக விஜய்யை களத்தில் இறக்கி விட அவர் தயாராகி விட்டது போல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

அந்த பேட்டியில் எஸ்.ஏ.சி கூறுகையில், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா? விஜய், இந்த மண்ணின் மைந்தன் என்று கூறியுள்ள எஸ்.ஏ.சி, ரஜினி தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், கமல் அதை வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். அதோடு, இதுவரை தனது மதத்தை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர், இப்போது நான் கிறிஸ்தவன் தான். அதனால் விஜய்யை ஜோசப் விஜய் என்று அழையுங்கள். என்னை அலெக்ஸ் சந்திரசேகரன் என்று அழையுங்கள் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்புவரை ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று மேடையில் பேசிய எஸ்.ஏ.சி., இரண்டே மாதத்தில் இப்படி மாறி விட்டதோடு, இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாதவர்கள் அரசியலுக்கு வரும்போது இந்த மண்ணின் மைந்தன் விஜய் ஏன் வரக்கூடாது என்று பேசியிருப்பதை அடுத்து, ரஜினியைப் போன்று 2021 தேர்தலில் விஜய்யும் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட ஆயத்தமாகி விட்டாரா என்கிற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதையடுத்து அதுகுறித்த விவாதங்களையும் வழக்கம்போல் மீடியாக்கள் தொடங்கிவிட்டன.

ஆனால் இரண்டே மாதத்தில் ரஜினி, கமலுக்கு எதிராக எஸ்.ஏ.சி பேசுவதின் பின்னணி என்ன என்பது மட்டும் தெரியவில்லை.