நடிகை நயன்தாரா தற்போது ஒரு படத்துக்கு 12 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், 69 நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ், மற்றும் மோகன்லால் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர கன்னடத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சிரஞ்சீவி மற்றும் அனில் ரவிபுடி இணையும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதில் தான் நடிகை நயன்தாராவை கதாநாயகியாக படத்தில் நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டது. ஆனால், நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா ரூ.18 கோடி சம்பளம் கேட்டதால், படத்தில் வேறு நடிகைகளைப் பரிசீலிக்க தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவி நடிப்பில் தற்போது விஸ்வம்பரா என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இது ஒரு வித்தியாசமான பேண்டஸி த்ரில்லர் படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தை வசிஷ்டா மல்லிடி இயக்குகிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷா சௌலா மற்றும் ரம்யா பசுபலேடி ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மகேஷ் பாபு நடித்த குண்டுர் காரம் படத்திற்காக ஒரு பெரிய வீட்டின் செட் அமைக்கப்பட்டது. அந்த செட்டில்தான் சிரஞ்சீவி மற்றும் த்ரிஷா நடித்த விஸ்வம்பரா படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.