விஷால் - சாய் தன்ஷிகா இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று தகவல் பரவுகிறது.
‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரித்தபோது, சில வருடங்களாக விஷால் - சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள். நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது. ஆகஸ்ட்டில் நடிகர் சங்க கட்டிடம் திறந்தவுடன், அந்த மாத இறுதி அல்லது செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ படத்தின் விழா நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவில் இருவரது காதல் மற்றும் திருமணம் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.