ஜூனியர்: திரை விமர்சனம்

 


அறிமுக நடிகர் கிரீத்தி ரெட்டி, வி.ரவிச்சந்திரன், ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜூனியர் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போமா.

கதைக்களம்

ரவிச்சந்திரன், சுதா ராணி தம்பதி 45 வயதிற்கு மேல் பெற்றோராகிறார்கள். சுதா ராணி பிரசவத்தின்போது இறந்துவிட, தனது மகன் கிரீத்தி ரெட்டியை தனியாள வளர்க்கிறார் ரவிச்சந்திரன்.

ஆனால், தனது அப்பாவின் முதிர்ச்சியால் சங்கடங்களை சந்திப்பதாக நினைக்கும் கிரீத்தி ரெட்டி அவரைவிட்டு விலகி இருக்க முயற்சிக்கிறார். ரைஸ் சொலூஷன் என்ற கம்பெனியில் காதலி ஸ்ரீலாவுக்காக கிரீத்தி ரெட்டியும் வேலைக்கு சேர்கிறார். முதல் நாளிலேயே டீம் லீடரான ஜெனிலியாவுடன் கிரீத்தி ரெட்டி மோதல் ஏற்படுகிறது.

அதன் விளைவாக அவரை வேறொரு டீமிற்கு மாற்றுகிறார் ஜெனிலியா. அங்கு ஊழல் நடந்திருப்பதை ஜெனிலியாவின் கவனத்திற்கு கொண்டுவருகிறார் கிரீத்தி ரெட்டி. ஆனால் அவர் மீது இருக்கும் கோபத்தால் ஜெனிலியா அதனை அலட்சியப்படுத்த, கிரீத்தி ரெட்டி அவரை பழிவாங்க நினைக்கிறார்.

கம்பெனியின் சிஇஓ ஆக ஜெனிலியா அறிவிக்கப்படும்போது அவரை அவமானப்படுத்தும் வேலையை கிரீத்தி ரெட்டி செய்கிறது. அதன் பின்னர் ஜெனிலியா யார் என்ற உண்மையை கம்பெனியின் ஓனரும், அவரது அப்பாவுமான ராவ் ரமேஷ் கிரீத்தி ரெட்டியிடம் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து கிரீத்தி ரெட்டி எடுத்த முடிவு என்ன? தனது அப்பாவின் பாசத்தை அவர் புரிந்துகொண்டாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

60 வயதை கடந்த அப்பாவுக்கும் 20களில் இருக்கும் மகனுக்கமான கதையாக படம் தொடங்குகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு வேறொரு தளத்தில் பயணிக்கிறது. என்றாலும் இந்த திரைக்கதையை இயக்குநர் ராதா கிருஷ்ணா ரெட்டி கச்சிதாக கொண்டு சென்றிருக்கிறார்.

அறிமுக ஹீரோவான கிரீத்தி ரெட்டி நடிப்பு, ஆக்ஷன், டான்ஸ் என எல்லா ஏரியாவிலும் பிண்ணிப்பெடலெடுக்கிறார். அவரது அறிமுக காட்சியில் வரும் சேஸிங் ஆக்ஷன் சீன் மிரட்டல். எனர்ஜிடிக்கான ஹீரோவாக ராம்சரணை கண்முன் நிறுத்துகிறார் கிரீத்தி ரெட்டி.

ஸ்ரீலீலா வழக்கமான தெலுங்கு படங்களில் வரும் ஹீரோயின்தான். அவரது டான்ஸைப் பற்றி சொல்லவா வேண்டும்; ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்த "வைரல் வையாரி" பாடலில் அவரும், கிரீத்தி ரெட்டியும் அதகளம் செய்திருக்கிறார்கள்.

கன்னட சூப்பர் ஸ்டார் வி.ரவிச்சந்திரன் அமைதியான அப்பா கேரக்டரில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் கதையே ஜெனிலியாவை சுற்றித்தான். அவரும் தனது ரோலினை கச்சிதமாக செய்திருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் தாண்டி முதல் படத்திலேயே, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் கிரீத்தி ரெட்டிதான் படத்தை தாங்குகிறார். ஆனால், இறுதியில் இந்த குருவி பனைமரத்தையே தாங்கும் என்பதுபோல் காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார்.


முதல் பாதி ஜாலியாக நகர, இரண்டாம் பாதியின் கதைக்களம் அப்படியே மகேஷ் பாபுவின் ஸ்ரீமாந்துடுவை நினைவுபடுத்துகிறது. எனினும் எமோஷனல் டிராவல் மற்றும் கிளைமேக்ஸ் நம்முடன் கனெக்ட் ஆவதில் நிற்கிறது படம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு உயிர்கொடுக்கிறது.

அதேபோல் வைரல் வையாரி பாடல் செம குத்து. தெலுங்கு, கன்னடம் என பைலிங்குவல் படமாக இயக்கியிருக்கும் ராதா கிருஷ்ணா ரெட்டி, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய என்டெர்டைன்மென்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.