நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் ரவி நெருக்கமானார். இருவரும் பொது வெளியிலேயே ஜோடியாக வலம் வருகின்றனர். இப்படி இவர்கள் வந்த பின் ஆர்த்தி ரவி, இவரது அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா, ரவி மோகன், கெனிஷா என ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நேற்று கூட ஆர்த்தி, ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என கெனிஷாவை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு இன்று(மே 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ரவியிடமிருந்து தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.