விஷாலுடன் ஓகஸ்ட் 29 இல் திருமணம்: உறுதி செய்தார் நடிகை சாய் தன்ஷிகா

நடிகர் விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக இருப்பதை நடிகை சாய் தன்ஷிகா உறுதி செய்துள்ளார்.

‘யோகிடா’ படத்தின் 'ட்ரெய்லர்' வெளியீட்டு விழாவின் பொது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று நேற்று காலை முதல் தகவல் பரவியது.

‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. சில வருடங்களாக விஷால் - சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள் என்றும் நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில்நேற்று சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் 'ட்ரெய்லர்' வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.

இதன்போது மேடையில் பேசிய சாய் தன்ஷிகா விஷாலுக்கும் தனக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார். இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.