Insta பக்கத்தில் 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 32 வயது மதிக்கத்தக்க தனது மனைவியைக் கணவரே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் குந்தன் ஷா ஆகிய இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் (Facebook) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், குந்தன் மீது கொண்ட காதலால் தனது முதல் கணவரைப் பிரிந்து, குந்தனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு அஞ்சலிக்கு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் (Reels) பதிவிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு அவரது கணவர் குந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஆத்திரமடைந்த குந்தன் நைலான் கயிற்றால் அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தான் கொல்லப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அஞ்சலி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "குந்தனைத் திருமணம் செய்தது எனது வாழ்வின் மிகப்பெரிய தவறு" என்று அழுதுகொண்டே தனது கணவர் மீது பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார்.
அஞ்சலியின் மகனிடம் நடத்திய விசாரணையில், தந்தை தனது தாயைக் கயிற்றால் நெரித்துக் கொன்றதை உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கயிற்றைக் கைப்பற்றி உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள குந்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் தொடங்கி, அதே சமூக வலைதள மோகத்தால் ஒரு காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
