மகாநதி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை லட்சுமி பிரியா, இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக, நிகழ்ச்சி குறித்த தனது எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்கள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து லட்சுமி பிரியா மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பார்க்கப்போவது அமைதியாக பேசும் நடிகை லட்சுமி பிரியா அல்ல என்றும், தன்னுடைய உண்மையான குணத்தை பார்க்கப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் இனிமையானவள், நல்லவள்தான். ஆனால் அதுமட்டும் நான் கிடையாது. எனக்கும் கோபம் வரும். என்னை எதிரில் இருப்பவர் எல்லை மீறினால், அதற்கேற்றபடி என்னுடைய அணுகுமுறையையும் மாற்றிக்கொள்வேன்” என லட்சுமி பிரியா கூறியுள்ளார்.
மேலும், கடந்த சீசனில் இடம்பெற்ற சில போட்டியாளர்களின் நடத்தையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ராஜு, பிரியங்கா மற்றும் சாண்டி ஆகியோர் இடம்பெற்ற சீசனைப் போன்ற ஒரு சீசனாக இந்த முறை அமைய வேண்டும் என தான் விரும்புவதாகவும், அப்படி அமைந்தால் தன்னை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் நிகழ்ச்சி கவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், இந்த சீசனில் ‘Common Man’ எனப்படும் சாதாரண மக்களும் போட்டியாளர்களாக இடம்பெறுவது நிகழ்ச்சிக்கு புதிய சுவையை கொடுக்கும் என லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
“என்னை ஆதரிப்பவர்களும் சாதாரண மக்கள்தான். அதனால் அவர்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் யாருக்காவது அநீதி நடந்தால், அது தனது பிரச்சினை இல்லை என்று அமைதியாக ஒதுங்கி செல்லும் நபர் தான் இல்லை என்றும், அந்த விஷயத்தில் தனது குரலை நிச்சயம் பதிவு செய்வேன் என்றும் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நிகழ்கால சிந்தனை மற்றும் சமயோசித புத்தியே பிக்பாஸ் வீட்டில் தனது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது நடிப்பு பயணத்திற்கான ஒரு புதிய வாய்ப்பாகவும் பார்க்கிறேன் என லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் போட்டியாளர்கள் 100 நாட்கள் வீட்டிற்குள் தங்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அவர்களின் குணநலன், குழு ஒற்றுமை, விளையாட்டு திறன் மற்றும் வியூகம் ஆகியவை சோதிக்கப்படும். இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
.jpg)