பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் வீட்டிற்குள் தங்கி, பல்வேறு டாஸ்க்குகளில் பங்கேற்று, சண்டை, காதல், அழுகை என பல உணர்வுகளை கடந்து போட்டியிடுகின்றனர்.
ஆனால், வார இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்து தொகுத்து வழங்கும் பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
தமிழில் முதல் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் 7-வது சீசனுக்காக அவருக்கு சுமார் ரூ.130 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதன்பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த விஜய் சேதுபதிக்கு 8-வது சீசனில் சுமார் ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அடுத்தடுத்த சீசன்களில் அவரது சம்பளம் ரூ.75 முதல் ரூ.80 கோடி வரை உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனாவின் சம்பளம் ஆரம்பத்தில் சுமார் ரூ.10 கோடி என்ற அளவில் இருந்ததாகவும், தற்போது அது ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலிருந்து தொகுப்பாளராக இருக்கும் மோகன்லாலுக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், கன்னட பிக்பாஸின் முகமாக இருந்து வரும் கிச்சா சுதீப்புக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.20 கோடி சம்பளம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சல்மான் கானுக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.200 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பளத் தொகைகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையிலானவை. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை அல்ல.
இந்நிலையில், பிக்பாஸ் தொகுப்பாளர்களின் சம்பளம் தொடர்பான இந்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
