தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், ‘துரந்தர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் தனது 17ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக சாரா அர்ஜூனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சாரா அர்ஜூன். அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் மூலம் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், அவர் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், ராம் சரணுக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அவரது தேர்வு குறித்து படக்குழு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கிடையில், சுகுமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி ஹைதராபாத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுகுமார், ராம் சரணுடன் மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
