திருமணத்துக்குப் பிறகு நடிகைகளின் திரைப்பயணம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘என்.ஜி.கே.’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைத் திருமணம் செய்த பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘ராமாயணா’ திரைப்படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், நடிகர்கள் திருமணமானாலும் குழந்தைகள் பெற்றாலும் கதாநாயகர்களாகத் தொடர்ந்து நடிக்க முடிகிறது; ஆனால் நடிகைகளுக்கு மட்டும் திருமணத்துக்குப் பிறகு வாய்ப்புகள் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்றும், அது நடிகைகளின் திறமைக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கவர்ச்சியும் நடிப்பின் ஒரு பரிமாணம்தான் எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளை அதில் எல்லை பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
