தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைத்ததாக குற்றம்சாட்டிய உதயநிதி, மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியைப் போல தவறான தகவல்களை அவர் சட்டசபையில் பேசியதாக விமர்சித்தார்.
சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த நிலையில், வெளியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, முதலமைச்சர் விஜய் தாம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.
“ஏற்கனவே முதலமைச்சரிடம் 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஆனால், அதில் ஒரு கேள்விக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை” என உதயநிதி கூறினார்.
மேலும், மக்கள் பிரச்சினைகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, ரீல்ஸுக்காக பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற அணுகுமுறையை விஜய் கடைப்பிடிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, திமுகவினருக்கு எதிராக ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் உதயநிதி குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய்யின் சட்டசபை பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளன.


.png)