கில்லி கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் வரை - சென்னையில் மாஸ் காட்டும் ‘விஜய் விநாயகர்’ சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ‘விஜய் விநாயகர்’ சிலைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை கொடுங்கையூர், ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை பகுதிகளில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அரசியல் பயணத்தை மையமாக வைத்து இந்த விநாயகர் சிலைகள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தியுடன் கூடிய கொண்டாட்டமும், ஆண்டுதோறும் புதுமையான தீம்களில் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளும் கவனம் ஈர்ப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு சென்னை பகுதிகளில் விஜய்யின் ரசிகர்கள் உருவாக்கிய ‘விஜய் விநாயகர்’ சிலைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில், விஜய்யின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில், ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய் நடித்த கபடி கெட்டப், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரச்சாரத் தோற்றம் மற்றும் வருங்கால முதல்வர் பாணியில் விஜய்யின் தோற்றம் என மூன்று விதமான அவதாரங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வித்தியாசமான இந்த சிலைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், ‘விஜய் விநாயகர்’ இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Post a Comment