நடிகர் இந்திரன்ஸ் கருப்பு திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், இப்படத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் அனகா ரவி ஆகியோரின் நடிப்பும் பெரிதாக கவனம் பெற்றது. தன் மகளுக்கு சிகிச்சையளிக்க போராடும்போது, ஜிபே செய்யத் தெரியாது என உடையும் காட்சியில் இந்திரன்ஸ் பலரையும் கண்கலங்க வைத்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் இந்திரன்ஸிடம், ‘கருப்பு திரைப்படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு இந்திரன்ஸ், “இயக்குநர் ஆர்ஜே பாலாஜி என்னிடம் கதை சொன்னபோது என்னுடைய கதாபாத்திரம் குறித்து ஆர்வம் இருந்தது. கேரளத்திலிருந்து தன் பிள்ளைகளின் சிகிச்சைக்காக பல தந்தைகள் சென்னை வருகிறார்கள். அப்படியான ஒரு தந்தையாக நடிக்கும்போது நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது புரிந்தது. ஆனால், அந்த நேரத்தில் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், கருப்புக்கு சரியான தேதிகளை ஒதுக்க முடியுமா என்கிற நெருக்கடியும் உருவானது. இருந்தும், எப்படியான நாள்களை மாற்றிக்கொண்டு கருப்பு படத்தில் நடித்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
