ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி நடிகர் நாக சைதன்யா மனு

தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தங்களுடைய ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திரை பிரபலங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், நாகார்ஜுனா, சிரஞ்சீவி, மோகன்லால், கமல்ஹாசன், சல்மான் கான் உள்பட பலர் இது தொடர்பாக வழக்குத் தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது முன்னாள் மனைவி சமந்தாவை, நாக சைதன்யா ஏமாற்றினார் என்றும், அவரே சமந்தாவின் சினிமா வாழ்க்கையை அழித்தார் என்றும் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இது வெறும் விமர்சனம் அல்ல, மன உளைச்சல் தரும் கேலி என்று வாதிட்டார்.

நாக சைதன்யாவின் பெயரை ஆபாசமான தேடல் சொற்களாகப் பயன்படுத்துவதாகவும் ஏ.ஐ மூலம் அவர் முகத்தையும் குரலையும் பயன்படுத்தி டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்குவதாகவும் அனுமதியின்றி அவருடைய பெயரையும் அடையாளத்தையும் பயன்படுத்தி சில இணையதளங்களில் வணிகப் பொருட்களை விற்பதாகவும் கூறினார். அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, செப். 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Post a Comment