தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதியர் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு. இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அவந்திகா, மலையாளத்தில் ‛ஆரம்பம்' என்ற படத்தில் ஹீரோயின் நடித்து வருகிறார். இதுதான் இவரின் அறிமுக சினிமா படம்.
இந்நிலையில் இந்த படம் முடியும் முன்பே திருமணத்திற்கு தாயாராகிவிட்டார். இவருக்கும் ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதற்காக பிரதமர் மோடியை டில்லியில் மணமகள், மணமகன் மற்றும் குஷ்பு - சுந்தர் சி தம்பதியினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுபற்றி குஷ்பு வெளியிட்ட பதிவில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் பெருமை எங்களுக்கு கிடைத்தது. நானும், என் கணவர் சுந்தர் சியும் எங்கள் மகளின் திருமண பத்திரிகையை அவரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். என் மகள், ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவரை மணக்க இருக்கிறார்.
எங்களது அழைப்பை ஏற்று, பிரதமர் மணமக்களை மனதார வாழ்த்தினார். அவரது பிஸியான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இந்த சந்திப்பு எங்களை மிகவும் நெகிழச் செய்ததுடன், பெருமையடையவும் செய்துள்ளது. பிரதமருக்கு மிக்க நன்றி'' என குறிப்பிட்டுள்ளனர்.
