'பெத்தி' படத்திற்கு பிரிமியர் காட்சி, டிக்கெட் கட்டண உயர்வு

ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில், புச்சிபாபு சனா இயக்கத்தில் அடுத்த வாரம் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'பெத்தி'.

தெலுங்குத் திரையுலகத்தில் சதவீதப் பங்கு அடிப்படையில் மட்டுமே இனி வரும் காலங்களில் படங்களைத் திரையிடுவோம், டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள் அறிவித்திருந்தனர். அதையடுத்து 'பெத்தி' படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. படத்தின் நாயகன் ராம்சரண் அப்பா நடிகர் சிரஞ்சீவி அவர்களுடன் பேசி சிக்கலைத் தீர்த்துவைத்தார்.

இந்நிலையில் ராம் சரணின் சித்தப்பாவான பவன் கல்யாண் துணை முதல்வராக இருக்கும் ஆந்திர மாநிலத்தில் இப்படத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஜுன் 3ம் தேதி இரவு 8 மணிக்கு பிரிமியர் காட்சி நடத்திக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு டிக்கெட் கட்டண உயர்வையும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

பிரிமியர் காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு சிங்கிள் தியேட்டர்கள் 100 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினசரி 5 காட்சிகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தெலுங்கானா அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றைத் தருமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும். 

Post a Comment