நடிகர் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டி அளித்து வருகிறார் ஜெயராம். அப்படி அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக ஜெயராம் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தாராம். அப்போது எதேச்சையாக அங்கு வந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்சி தோனி, ஜெயராமை பார்த்ததும் வேகமாக அவரைத் தேடி வந்து அவரது கால்களைத் தொட்டு வணங்கியுள்ளார்.
இது ஜெயராமை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. நம் கால்களைத் தொடும் அளவிற்கு நாம் என்ன செய்து விட்டோம், ஒருவேளை தவறாக ஆள் மாறி போய் இப்படி வணங்குகிறாரோ என்று நினைத்தாராம் ஜெயராம். ஆனால் நடந்தது என்னவென்றால் தோனியின் மனைவி சாக்சிக்கு ஒரு மலையாள தோழி நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். தோனியின் மகள் ஜிவா குழந்தையாக இருந்தபோது ஜெயராம் நடித்த அத்வைதம் படத்தில் இடம்பெற்ற 'அம்பலப்புழா உன்னிகண்ணனோடு நீ' என்கிற பாடலை பாடித் தான் அந்த தோழி தூங்க வைப்பாராம்.
அப்போது அந்தப் பாடல், அதில் நடித்த ஜெயராம் குறித்து நிறைய செய்திகளை தோனியின் மனைவி கேட்டு அறிந்து கொண்டாராம். அதனால் தான் அந்த கிரிக்கெட் நிகழ்ச்சியின் போது ஜெயராமை பார்த்ததும் தேடி வந்து அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதாக ஜெயராமிடம் தோனியின் மனைவி சாக்சி கூறினாராம். தனது பழைய மலையாள பாடல் ஒன்று இந்தியாவில் ஒரு முக்கியமான கிரிக்கெட் ஜாம்பவானின் குடும்பத்தோடு தனக்கு இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என்று கூறியுள்ளார் ஜெயராம்.
