ஜூனிலும் வெளியாகாத ஜன நாயகன்?

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் இம்மாதமும் திரைக்கு வராது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வரான பின்பு ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார்.

ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகுமென தயாரிப்பாளரும் கூறியிருந்தார்.

ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் சான்றிதழை வழங்காமல் இருப்பதால் இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரவே வாய்ப்புகள் இருக்கின்றன. ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அதற்கு முன்பாகத் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத்திடம் ஜன நாயகன் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு வினோத், “ஜன நாயகனிலுள்ள உண்மையைப் பேச எனக்கு தைரியம் இல்லை. பேசினாலும் அதனை வெளியிடும் தைரியம் உங்களுக்கும் இல்லை” என்றார்.

இயக்குநர் வினோத்தின் இப்பதில் ரசிகர்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார வெளியீடாக பெத்தி, பரிமளா அண்ட் கோ படங்கள் வெளியாக, ஜூன் 19 அன்று சசியின் நூறுசாமி வெளியாகிறது. ஜூனில் சில படங்கள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் ஜன நாயகன் வந்தால் அப்படங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் முறையாக விசாரித்தே ஜூன் படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், ஜூன் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் விலகவே வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. 




Post a Comment