விடைபெற்றார் பாரதிராஜா: 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் நல்லடக்கம்

 



இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரச மரியாதையுடன் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாரதிராஜா நல்லடக்கத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தங்கள் ஊரின் பாசத்துக்குரிய பாரதிராஜா, சொந்த மண்ணில் வந்து நல்லடக்கம் செய்யப்பட்டதை நேரில் பார்த்த மக்களும் உறவினர்களும், திரைத்துரையினரும் துயரம் அடைந்தனர். 

முன்னதாக, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பொலிஸின் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அரசு மரியாதை என்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனியிடம்பிடித்திருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

இயக்குநர் பாரதிராஜா (வயது 84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். பாரதிராஜாவுக்கு மனைவி சந்திரலீலா, மகள் ஜனனி உள்ளனர். அவரது மகன் மனோஜ் மறைவுக்குப் பின் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

இந்நிலையில் நேற்று காலை அவர் காலமானார். நேற்று மக்கள் அஞ்சலிக்காக சென்னை வீட்டில் பாரதிராஜா உடல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு சென்னையிலிருந்து தேனி கொண்டு வரப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள பாரதிராஜா பிறந்த கிராமமான அல்லி நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உடல், இன்று பிற்பகலில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்புக்குக் கொண்டு வரப்பட்டது.

பாரதிராஜாவுக்குச் சொந்தமான பண்ணைத் தோப்பில் அவரது உடலுக்கு உறவினர்களும் திரையுலகினரும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பாரதிராஜாவுக்கு அவரது மகள் ஜனனி மற்றும் சகோதரர் இறுதிச் சடங்குகளை செய்தனர். இயக்குநர் பாக்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் அவருடன் இருந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

 ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு தேனியில் திரைப் பிரபலங்களும், தென்மாவட்ட ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

 நடிகைகள் சுகாசினி, ராதிகா, நிரோஷா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியகுழு உறுப்பினர் கே.பாலபாரதி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ.மகேந்திரன், நடிகர்கள் நிழல்கள்ரவி, சமுத்திரக்கனி, கருணாஸ்,விக்னேஷ், லட்சுமன், இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ராம், பேரரசு, ரத்தினகுமார், சீமான்,பொன்ராம், வெற்றிமாறன்,ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் வடிவேலு, இளவரசு, ஜோ மல்லூரி, திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.சரவணன்,கிராமிய பாடகர்கள் ராஜலட்சுமி, செந்தில்கணேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

டி.ஐ.ஜி. சசிமோகன் தலைமையில் தேனி எஸ் பி சினேஹபிரியா, திண்டுக்கல் எஸ்.பி. பிரதீப் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முதல் மரியாதை கொடுத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டார். 

Post a Comment