பெத்தி படத்தின் மீதான விமர்சனங்களுக்கு இயக்குநர் புச்சி பாபு சனா தவறுகளை ஏற்றுக்கொண்டு பெண்கள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலே ரூ.135.36 கோடி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமாக இருப்பதாகவும் இணையவாசிகளும் ஜான்வியின் ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:
ஒரு திரைப்பட இயக்குநராக சினிமா என்பது மக்களை கொண்டாடவும் உத்வேகம் அளிக்கவும் தொடர்புப் படுத்தவும் வேண்டும் என்பதை நம்புகிறேன். அது யாரையும் அமைதியிழக்கவோ அவமானப்படுத்தவோ கூடாது. பெத்தி படத்தில் சில காட்சிகள் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.
திரையிலும் திரை மறைவிலும் பெண்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. அவர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்குக் கிடையாது. படத்தில் அப்படி எங்காவது வெளிப்பட்டிருந்தால் அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
விமர்சனங்களை ஏற்று அந்தக் காட்சிகளில் மாற்றங்கள் செய்துள்ளோம். சினிமா என்பது ரசிகர்களுடன் சேர்ந்து வளரவேண்டியது. ரசிகர்களின் கண்ணோட்டம், உணர்ச்சிவசப்படக்கூடிய விஷயங்களில் முன்னேற்றம் தேவையானபோது படைப்பாளிகள் நாங்களும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
எல்லா பெண்களும் மதிக்கப்பட வேண்டும். மரியாதையுடன் பிரதிநிதித்துவப்பட வேண்டும். வலுவான கதாபாத்திரங்களுடன் இந்த மதிப்பீடுகளுடன் நல்ல கதைகளைச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நேர்மையுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.
