அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த வீடியோவை வெளியிட்ட முதல் அமைச்சர் விஜய்

 
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்துடன் இருந்த வீடியோவை தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தனது பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு சென்றிருந்தார்.

அங்கு அஜித்குமார் பங்கேற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பந்தயத்தில் அஜித்தின் அணி 38-வது இடத்தை பிடித்தது.

இந்நிலையில், சில்வர்ஸ்டோனில் அஜித்துடன் விஜய் இருந்த 2 நிமிடம் 53 விநாடிகள் கொண்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ரேஸ் கார்கள் மற்றும் பந்தயம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்களிடம் விஜய் கேட்டறிகிறார்.

தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து ரேஸ் கார் மாதிரியையும் விஜய் ஓட்டிப் பார்க்கிறார்.

மேலும், ‘Joseph Vijay’ என்ற பெயர் இடம்பெற்ற ரேசிங் உடையை அணிந்து, அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்து மகிழ்கிறார்.

அப்போது இருவரும் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், கார் பந்தயம் குறித்த பல விஷயங்களை அஜித் விஜய்க்கு விளக்கிக் கூறுகிறார்.

பந்தயம் தொடங்கியதும் அஜித்தின் கார் சீறிப்பாய்வதை பார்த்து விஜய் உற்சாகப்படுத்தும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இறுதியில் இருவரும் தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

விஜய்–அஜித்தின் இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment