அஜித் குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் கார் ரேஸ் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்ததா? 10-வது இடமா? அல்லது 38-வது இடமா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் இந்த குழப்பத்திற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டி, சாதாரணமாக முதலாவதாக வரும் காரை மட்டும் தீர்மானிக்கும் ரேஸ் கிடையாது.
இது ஒரு Endurance Race.
அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த அணி அதிகமான லேப்களை நிறைவு செய்கிறது என்பதன் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்.
இந்த போட்டியில் மொத்தம் மூன்று முக்கிய பிரிவுகள் இருந்தன.
அதில் அஜித் குமார் ரேசிங் அணி LMP3 Pro-Am பிரிவில் பங்கேற்றது.
‘Ajith Kumar Racing powered by Garage Team’ சார்பில் அஜித் குமார் மற்றும் தொழில்முறை ரேஸரான ரோமன் ஆகியோர் மாறி மாறி காரை ஓட்டினர்.
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் ஒரு லேப்பின் தூரம் சுமார் 5.8 கிலோமீட்டர்.
இந்த நிலையில், அஜித்தின் அணி குறிப்பிட்ட நேரத்தில் 48 லேப்களை நிறைவு செய்து, சுமார் 282.8 கிலோமீட்டர் தூரத்தை கடந்தது.
மொத்தமாக 44 கார்கள் பங்கேற்ற இந்த போட்டியில், அஜித்தின் அணி Overall-ஆக 38-வது இடத்தை பிடித்தது.
அதே நேரத்தில், அவர்கள் பங்கேற்ற LMP3 Pro-Am பிரிவில் 11 கார்களில் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
அப்படியானால், மூன்றாவது இடம் என்ற தகவல் எப்படி வந்தது?
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
LMP3 பிரிவில் Garage Team மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.
அதே ‘Garage’ என்ற பெயர் அஜித்தின் அணியுடனும் தொடர்புபட்டிருப்பதால், இணையத்திலும் சில ஊடகங்களிலும் தகவல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, அஜித்தின் அணியின் சரியான முடிவு Overall-ஆக 38-வது இடம்; LMP3 Pro-Am பிரிவில் 10-வது இடம் என்பதுதான்.
வெற்றி, தோல்வியை தாண்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச அளவில் தனக்கென ஒரு ரேசிங் அணியை உருவாக்கி, இப்படியான கடினமான Endurance Race-ல் பங்கேற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிலும், அஜித்தின் கார் ரேசிங் மீதான ஆர்வமும் அர்ப்பணிப்பும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
