சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுகாஷ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெறும் இந்தப் போட்டியில், மீனவ சமூகத்தின் வாழ்க்கை, போராட்டம், அன்பு மற்றும் போட்டி போன்ற பல்வேறு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு படகில் ஆறு பேர் இடம்பெறும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ‘மண்டாடி’ என அழைக்கப்படுகிறார். கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் திசையை கணித்து படகை வழிநடத்துவதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
கடலில் பல ஆபத்தான காட்சிகளில் சூரி உள்ளிட்ட நடிகர்கள் கஷ்டப்பட்டு நடித்துள்ளதாகவும், சூரியின் நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘மண்டாடி’ தங்களது எதிர்பார்ப்பை தாண்டி ரசிகர்களை திருப்திப்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.jpg)