மைத்ரேயி விவகாரம்: கனேடிய தமிழ் காங்கிரஸ் கண்டனம்!


மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான இணையவழி தாக்குதல்களுக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விருது பெற்ற தமிழ்-கனேடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணனை குறிவைத்து, அண்மையில் திட்டமிட்ட முறையில் இணையவழி துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ், ஒவ்வொரு தனிநபருக்கும் தனது அடையாளத்தைத் தானே தெரிவுசெய்து, வரையறுத்து, வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஒருவரின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்துடன் அவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதையும், அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதையும் அவரே தீர்மானிக்க வேண்டும் எனவும் CTC தெரிவித்துள்ளது.

மைத்ரேயி ராமகிருஷ்ணனை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பிரசாரம் வெறுமனே கருத்து வேறுபாடு அல்ல என்றும், அவரது அடையாளத்தையும் தனிப்பட்ட உரிமையையும் கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தங்களது அடையாளத்தை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது என்பதை வெளிப்புற குழுக்களோ தனிநபர்களோ தீர்மானிக்க முயற்சிப்பதை CTC உறுதியாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Post a Comment