தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்துள்ளார்.
துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய்யின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும். இதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இன்று விஜய் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மேலும், சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளை நடத்தும் முறைகள் குறித்து விஜய் நேரில் பார்வையிட உள்ளார்.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ள விஜய், இந்தப் பயணத்தின் மூலம் மோட்டார் ஸ்போர்ட்ஸ், விளையாட்டுச் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளார்.
