ராதிகாவைப் பார்த்ததும் பதற்றமாகிவிட்டது!” – மனம் திறந்த லியோ சிவகுமார்


 நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் லியோ சிவகுமார் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார்.

மேலும், ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தை அசாசி கிரியேஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் சார்பில் அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

குடும்ப உணர்வுகள், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து லியோ சிவகுமார் கூறுகையில், “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோதே, எனக்கு அம்மாவாக ராதிகாதான் நடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்த்ததும் எனக்குப் பயமும் பதற்றமும் ஏற்பட்டுவிட்டது.

ஒரு பெரிய நடிகையின் முன்பு எப்படிச் சிறப்பாக நடிக்கப்போகிறோம் என்ற தயக்கமும் இருந்தது. ஆனால், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் ராதிகா என்னிடம் சகஜமாகப் பழகினார். அவரது அணுகுமுறையும் அனுபவமும் என்னை வியக்கவைத்தன.

ஒரே நாளில் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. எனவே, விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ரசிகர்களுக்கு நல்லதொரு ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான விருந்து காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment