தென்னிந்தியத் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, உடல்நலக் குறைவு காரணமாக இன்று (17) காலை 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தருமபுரம் பத்மநாபா தெருவிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தேவாவின் மறைவுச் செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் பொதுமக்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தேவாவின் மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
