தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன், திரைப்பட விமர்சனங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கருத்துகள் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், திரைப்பட விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றால், அதுகுறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது முக்கியம் என்றும், அவை ஆரோக்கியமான முறையில் தெரிவிக்கப்படும்போது ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், திட்டமிட்டு பணம் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அனைத்து விமர்சனங்களுக்கும் தன்னால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்த அனுபமா, இதனைத் தனது திமிராக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். தனக்குப் பிடித்த பதிவுகளுக்கு விருப்பத்துடன் பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துப் பதிவுகளுக்கும் பதிலளிக்கவில்லை என்பதற்காக, தனக்கு வேறு வேலை இல்லையா எனக் கேட்பவர்களும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஓய்வு நேரம் இருந்தாலும், அது இல்லாததுபோல் ஏன் நடிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அனுபமா பரமேஸ்வரனின் இந்தக் கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
