நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பாக நடிகை மிர்ணா மேனன் வெளியிட்டுள்ள நன்றிப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிர்ணா மேனன், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது பதிவில், “ஒரே சூரியன். ஒரே நிலவு. ஒரே சூப்பர் ஸ்டார். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை மெகா பிளாக்பஸ்டராக மாற்றியமைத்தமைக்கு நன்றி. ரஜினிகாந்த் அவர்களே, நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தன்னை ஓர் அங்கமாக்கியதற்கும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், சிறப்பாகச் செயல்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.
2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மிர்ணா மேனனின் நன்றிப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
