சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து! ‘சீன்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது திரைப்படமான ‘சீன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆவேஷம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யா பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் 6ஆம் திகதி ‘சீன்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 88 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, சூர்யாவின் அடுத்த திரைப்படம் அவரது தொடர் வெற்றியை நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Post a Comment