நடிகை ஸ்வாசிகா காலில் விழுந்த இயக்குநர் மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் நடிகை ஸ்வாசிகா காலில் விழுந்த விடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் சசி இயக்கத்தில் கணவனை இழந்த தாயின் உரிமைகளையும் உணர்வுகளையும் பேசும் படமாக நூறு சாமி உருவாகியுள்ளது. தாயுணர்வைக் கடவுளாக இல்லாமல் மனுஷியாகவும் முன்னிறுத்த வேண்டும் என்பதை உண்மைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புப்படுத்தி எடுத்துள்ளனர்.

நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (ஜூன் 12) நடைபெற்றது.

இதில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் கலந்துகொண்டு படத்தைப் புகழ்ந்து பேசியதுடன் நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பை வியந்து பாராட்டினர்.

முக்கியமாக, இயக்குநர் மிஷ்கின், “இந்தக் கதையை எழுதி முடித்ததும் இயக்குநர் சசி என்னை அழைத்து எங்கிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அலுவலகத்தில் இருக்கிறேன் என்றதும், எனக்காக இரண்டு மணி நேரம் அலுவலகத்தை விட்டு வெளியே போ என்றார். நான் சரியென வெளியே போனதும் என் உதவி இயக்குநர்களிடம் நூறு சாமி கதையைச் சொல்லி விவாதித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் இன்னொரு இயக்குநரின் உதவி இயக்குநர்களிடம் கதையைச் சொல்ல மாட்டார். ஆனால், சசி சொல்வார். அதுதான் சசி மனிதர்களின் மீது வைத்திருக்கிற நம்பிக்கை.

சமூகத்தைக் கட்டமைத்த ஆண்கள், சட்ட திட்டங்களை உருவாக்கிய ஆண்கள், பெண்களை எப்படி அணுகுகிறார்கள்? இந்த சமூகத்தில் கணவனை இழந்த பெண்கள், கணவன் இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அப்படியொரு பெண்ணின் கதையைத்தான் சசி கூறியிருக்கிறார். நடிகை ஸ்வாசிகா மிகச் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக நேர்மையாக இருந்துள்ளார். நீண்ட காலம் கழித்து வலுவான நடிப்பைப் பார்த்தேன். போகும்போது உங்கள் காலில் விழுகிறேன். அதற்கு மிகத் தகுதியானவர் நீங்கள்” என்றார். சொன்னதுபோல், இயக்குநர் மிஷ்கின் கிளம்பும்போது நடிகை ஸ்வாசிகாவைத் தேடிவந்து காலில் விழுந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Post a Comment