பிக்பாஸ் 10-ல் விஜய் டிவி பிரபலங்கள்! வெளியான புதிய லிஸ்ட்


சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘பிக்பாஸ்’ 10வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில், இந்த முறை பிக்பாஸ் 10வது சீசன் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும், வழக்கமாக பிரபலங்கள் மட்டுமே போட்டியாளர்களாக களமிறங்கும் நிலையில், இந்த முறை பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிலரும் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பிக்பாஸ் குழுவும் போட்டியாளர்களின் அடையாளத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படும் சில விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களின் பெயர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அதன்படி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா, ‘சின்ன மருமகள்’ தொடரின் நாயகன் நவீன் மற்றும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்த அக்ஷிதா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இவர்களின் பங்கேற்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீடு திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த முறை யார் யார் களமிறங்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது.

Post a Comment