சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திலும் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்தின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாத நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த திரைப்படம் அக்டோபர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்திற்கு சென்சார் தரப்பில் ‘A’ சான்றிதழ் வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறைக் காட்சிகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
‘A’ சான்றிதழ் கிடைத்தால் 18 வயதுக்கு குறைவானவர்கள் திரைப்படத்தை பார்க்க முடியாது. இதனால் குடும்ப ரசிகர்களின் வருகை குறைந்து, வசூல் பாதிக்கப்படலாம் என படக்குழு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு எப்படியாவது ‘U/A’ சான்றிதழ் பெற வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ‘A’ சான்றிதழுடன் படத்தை வெளியிட வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் கிடைக்குமா? அல்லது ‘U/A’ சான்றிதழுடன் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
