நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் திரைப்படம்தான் AK64. இந்த கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ‘DareDevil’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக ஆதிக் ரவிச்சந்திரன் முன்பு கூறியிருந்தார். ஆனால் AK64 அதைவிட வித்தியாசமான படமாக இருக்கும் என்றும், குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் வலுவான திரைக்கதையுடன் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனால் படத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
முன்னதாக AK64 படத்தின் இயக்குநர் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல்கள் உண்மை இல்லை என்றும், ஆதிக் ரவிச்சந்திரன்தான் படத்தை இயக்குகிறார் என்றும் அஜித்தின் மேலாளர் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
தற்போது ‘DareDevil’ என்ற தலைப்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்தின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் எந்த மாதிரியான கதையை கொண்டிருக்கும்? அஜித்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? அனிருத்தின் இசை எப்படி அமையும்? போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும்போது இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
.png)