கார்த்தி நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனையொட்டி படக்குழுவினர் தீவிரமான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரைக்கு சென்ற கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து, திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தியிடம், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியிடப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கார்த்தி, “தமிழ் ராக்கர்ஸ் பிரச்சினை பற்றி முதலமைச்சர் விஜய்க்கு நன்றாகவே தெரியும். அவரை நேரில் பார்க்கும்போதுகூட, ‘அண்ணா, இந்தப் பிரச்சினையை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர் பார்த்துக்கொள்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளை, தனக்கு அரசியலுக்கு வருவதில் எந்தவிதமான விருப்பமும் இல்லை என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
“எனக்கு அரசியலுக்கு வரும் விருப்பம் இல்லை. எனக்கு படங்கள் ஹிட் கொடுத்தால் போதும்” என அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கார்த்தியின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
