தமிழ் திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
தனது மூத்த மகள் சாந்தியின் பெயரில் சென்னை அண்ணா சாலையில் சிவாஜி கணேசன் திரையரங்கம் ஒன்றையும் கட்டியிருந்தார்.
மேலும், சிவாஜி கணேசன் நடிப்பில் 1974ஆம் ஆண்டு வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தை சாந்தி தயாரித்திருந்தார். சாந்தி நாராயணசாமியின் கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு சத்யலட்சுமி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமான செய்தி, சிவாஜி கணேசன் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
