ஷாலினி பாண்டேவை குறிவைத்த AI அட்டூழியம்.. இணையத்தில் பரவும் வீடியோவால் வெடித்த சர்ச்சை

நடிகை ஷாலினி பாண்டேவைப் போல சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷாலினி பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாலினி பாண்டே, தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், பல்வேறு நல்ல விஷயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே தொழில்நுட்பத்தை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பெண்களை குறிவைத்து இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்கி, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது மிகவும் வேதனையளிப்பதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைப் போல உருவாக்கப்பட்டு இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோ உண்மையானது அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களில் பார்த்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தளத்தில் புகார் அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற போலி உள்ளடக்கங்களை பகிர்வதன் மூலம் அதன் பரவலுக்கு நாம் காரணமாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷாலினி பாண்டேவின் இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளதுடன், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் பெண்களுக்கு எதிராக உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் குறித்த விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது

Post a Comment