படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள்..? இயக்குநரை கத்தியுடன் மிரட்டிய ஜெயசூர்யா!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயசூர்யா. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், தனக்கென தனி ரசிகர் வட்டத்தையும் கொண்டுள்ளார்.

தற்போது ஜெயசூர்யா, வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் ‘கத்தனார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘ஹோம்’ திரைப்படத்தை இயக்கிய ரோஜின் தாமஸ் இப்படத்தை இயக்குகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், நடிகர் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, ‘கத்தனார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இடைவெளிகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இப்படத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட ஜெயசூர்யாவின் ‘ஆடு 3’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘ஆபரேஷன் ட்ரால்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயசூர்யா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

இயக்குநர் ரோஜின் தாமஸிடம் கேக் வெட்டுவதற்கான கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெயசூர்யா, “கத்தனார் படத்தை எப்போது ரிலீஸ் செய்யப் போகிறீர்கள்? இல்லை இந்தக் கத்தியை நான் ரிலீஸ் செய்யட்டுமா?” என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கத்தனார்’ படத்தின் வெளியீட்டுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலேயே ஜெயசூர்யா இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த இயக்குநர் ரோஜின் தாமஸும் அதே பாணியில் நகைச்சுவையாக, தற்போதைக்கு வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியாது என்றும், விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், ‘கத்தனார்’ திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Post a Comment